பாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா

Webdunia| Last Modified வியாழன், 1 ஜனவரி 2009 (14:09 IST)
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவில் இஸ்ரேல் நடத்தும் ராணுவ தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் உடைமைகளை இழந்துள்ளனர்.

என்னதான் ஆத்திர மூட்டும் செயல் நடந்தாலும் இம்மாதிரி அறிவீனமான ஆயுதத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்க கூடாது. இது இஸ்ரேல் மீது மோசமான எண்ணத்தை சர்வதேச நாடுகளிடம் உருவாக்கி இருக்கிறது.
எந்த ஒரு நாட்டையும் மற்றவர் ரத்தத்தின் மீது நிர்மானிக்க முடியாது. அந்த செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் முடியாது. எந்த ஒரு மதமும் இதுபோன்று உயிர்களை பறிக்க அனுமதிக்கவில்லை.

இஸ்ரேலின் இந்த மோசமான தாக்குதலையும், அப்பாவி மக்களை கொல்வதையும் இந்திய அரசு கண்டிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு, உடைகள், மருந்து போன்ற நிவாரண பொருட்களையும் இந்தியா அனுப்ப வேண்டும் என அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :