நீலகிரி மலைப்பகுதியில் கடும் வறட்சி- குட்டையாக மாறியது பவானிசாகர் அணை

ஈரோடு வேலு‌ச்சா‌மி செ‌ய்‌தியாள‌‌ர்

Webdunia|
webdunia photo
WD
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி செல்கிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் கலக்கும் இடம்தான் பவானிசாகர் அணை. இதன் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகும். அணையின் அடிப்பகுதியில் சகதிகள் இருப்பதால் 15 அடியை கழித்து மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும்.

இந்த அணையின் மூலம் கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய பகுதியும், பவானி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் மற்றும் காளிங்கராயன் பாசன வாய்க்கால் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய பகுதிகளும் பயன்பெறுகிறது.
இது தவிர ஈரோடு மாவடத்தின் பெரும்பாலான பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும். இப்படி முக்கியதுவம் பெற்ற பவானிசாகர் அணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில் பருவமழை பொய்த்ததால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்தது. அதேசமயம் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையில் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி செல்ல தொடங்கியது.
webdunia photo
WD
நேற்று மாலை 4 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 33.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கனஅடி தண்ணீரும் பவானி ஆற்றில் வினாடிக்கு 155 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.கடந்த ஆண்டு இதே நேரத்தில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 71.39 அடியாக இருந்தது.
கடந்த ஆண்டை விட 38 அடி குறைவாக உள்ளதால் அணையின் நீர்தேக்க பகுதி பார்ப்பதற்கு குட்டைபோல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி சென்றால் ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து கீழ்நோக்கி செல்வதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :