தி.மு.க. தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது: இராமதாஸ்

Webdunia|
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் ஆளும் தி.மு.க. கட்சியின் செயற்க்குழு நிறைவேற்றியுள்ளத் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் கூறியுள்ளார்.

வேலூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இன்று காலை தி.மு.க. செயற்க்குழு நிறைவேற்றிய தீர்மானம் குறித்து கருத்து கேட்டதற்கு, இலங்கைத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையோ அல்லது எதிர்பார்பையோ இந்தத் தீர்மானம் சற்றும் பிரதிபலிக்கவில்லை என்று இராமதாஸ் கூறியுள்ளார்.

தி.மு.க. செயற்க்குழு நிறைவேற்றியுள்ள இந்தத் தீர்மானம், இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்துவரும் ராஜபக்ச அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஒத்துள்ளது என்று சாடிய இராமதாஸ், இந்தத் தீர்மானம் எங்களை வெட்கப்பட, வேதனைப்பட வைத்துள்ளது. இலங்கையில் நடைபெறும் போரை நிறுத்துவது என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இது சற்றும் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
“போர் நிறுத்தம் குறித்து இன்றையத் தீர்மானத்தில் எதுவும் பேசாததால், இப்பிரச்சனையில் தமிழக அரசு கை கழுவி விட்டது என்றே பொருள். தமிழர்களின் நலனைக் காக்க வடக்குலும், கிழக்கிலும் ஒரு சுயாட்சி அமைக்க சிறிலங்க அரசுடன் இணைந்து மத்திய அரசு வழிகாண வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியுள்ளது. ஆனால் போரை முடிவுக்குக் கொண்டு வராமல் அதிகாரப் பகிர்வு என்பதெல்லாம் எப்படி சாத்தியம்? எல்லாம் கலைஞருக்கே வெளிச்சம்” என்று இராமதாஸ் கூறியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும் அங்கு நடக்கும் தாக்குதலில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர், சிறிலங்க இராணுவம் நடத்தும் போரில் அங்கு எவரும் விஞ்சப்போவதில்லை என்று நிலை உள்ளது. அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்ட பின்பு, வட கிழக்கிற்கு சுயாட்சி என்பது குறித்து யாரோடு பேசுவது? ஈழத் தமிழர்களை தி.மு.க. கைகழுவி விட்டது. தி.மு.க. அரசிற்கும் ராஜபக்ச அரசிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை கலைஞர் காட்டிவிட்டார்” என்று கூறிய இராமதாஸ், தி.மு.க. அறிவித்துள்ள மாநாடு, பேரணி என்பதெல்லாம் ஒன்றும் புதிதல்ல என்றும், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் 1958ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதியே தமிழர் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் தி.மு.க. நடத்திவிட்டது என்றும், எனவே தி.மு.க. இன்று அறிவித்துள்ளத்தெல்லாம் 50 ஆண்டுகள் பழமையான போராட்டங்கள்தான் என்று கூறியுள்ளார்.
5 முறை ஆட்சிக்கு வந்துவிட்டது, பல முறை எதிர்க்கட்சியாக இருந்துவிட்டது தி.மு.க., ஆனால் ஈழத் தமிழர் நலன் காக்க எதையும் அக்கட்சி செய்யவில்லை என்று இராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார்.

தி.மு.க. அரசைக் கவிழ்க்கவே சதித்திட்டம் தீட்டப்படுவதாக கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளாரே என்று கேட்டதற்கு பதிலளித்த இராமதாஸ், “எப்படி கவிழ்க்க முடியும்? தி.மு.க. அரசிற்கு காங்கிரஸ் கட்சியின் 35 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. மத்திய மாநில அரசுகள் அதன் கையில்தான் உள்ளது. எனவே ஆட்சியைக் கவிழ்க்க என்று கூறுவதெல்லாம் திசைதிருப்பும் குற்றச்சாற்றுகள” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :