தமிழகம், புதுச்சேரியில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

Last Updated: சனி, 29 மார்ச் 2014 (07:49 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்குகிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதால் அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் தங்களது தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
 
வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 3 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் அதிகாரி அறைக்குள் வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். அலுவலக வளாகத்துக்குள் மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர் ஊர்வலமாக வர விரும்பினால் அது குறித்து முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், இதற்கான செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
 
வேட்புமனு தாக்கலுக்காக வேட்பாளர் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
 
மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான அதிகாரி, நோட்டரி பப்ளிக் அல்லது பிரமாண ஆணையர் ஆகியோரில் ஒருவரது முன்னிலையில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு அதை முகவர் மூலம் தேர்தல் அலுவலக அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி அளிக்கும் போது, வேட்பாளரால் அந்த முகவர் அதிகாரம் அளிக்கப்பட்டு அதற்கான கடிதத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும்.
 
மருத்துவச் சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவமனை டாக்டரிடமும், சிறையில் இருப்பவர்கள் போட்டியிட விரும்பினால் சிறைக் கண்காணிப்பாளரிடமும் கையெழுத்து பெற்று, அந்த பிரமாண பத்திரத்தை முகவர் மூலமாக அனுப்ப வேண்டும்.
 
வேட்பாளர்கள் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து அவர்களது செலவுக் கணக்கு தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக செலவிடப்படும் தொகைகள் அனைத்தும் அவர் சார்ந்த கட்சிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால், வேட்புமனு தாக்கல் செய்த தேதியில் இருந்து வேட்பாளர் செய்யும் பிரசார செலவுகள் அனைத்தும் அவரது கணக்கில் சேர்க்கப்படும்.
 
இந்த செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் இரண்டு வெளி மாநிலப் பார்வையாளர்கள் வீதம் தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கு 78 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களின் பிரசார செலவுக் கணக்குகளை கண்காணிக்கத் தொடங்குவார்கள்.
 
ஒவ்வொரு கட்சியிலும் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் இதர தலைவர்களின் பிரசார பயணச் செலவினை சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேர்க்காமல் இருப்பதற்கு அவர்கள் தங்களது பெயர்ப் பட்டியலை தேர்தல் ஆணையத்திடமோ அல்லது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடமோ அளிக்க வேண்டும்.
 
இந்த பெயர் பட்டியலை சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்கி ஒரு வாரத்துக்குள் அளிக்க வேண்டும். அப்படி அளிப்பவர்களுக்கு மட்டுமே பிரசார பயணச் செலவு சலுகை வழங்கப்படும்.
 
எத்தனை பேர் முன்மொழியலாம்? அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்றால் அவர் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த (வேட்பாளர் பட்டியலில் பெயர் இருப்பவர்) ஒருவர் முன்மொழிந்தால் போதும். ஆனால், அங்கீகாரமில்லாத கட்சி அல்லது சுயேச்சை என்றால் 10 பேர் முன்மொழிய வேண்டும்.
 
வேட்புமனு தாக்கல் செய்யும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.25 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் என்றால், ரூ.12 ஆயிரத்து 500-ஐ முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும்.
 
இறுதிப் பட்டியல் எப்போது தெரியும்? மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுக்களை ஏப்ரல் 5-ஆம் தேதி வரை அளிக்க வேண்டும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9 கடைசி நாளாகும். அன்றைய தினம், தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தெரியும். வாக்குப் பதிவு ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. மே 16-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி ஏப்ரல் 5
 
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7
 
மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 9
 
வாக்குப் பதிவு ஏப்ரல் 24
 
வாக்கு எண்ணிக்கை மே 16


இதில் மேலும் படிக்கவும் :