தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் நடத்த வாய்ப்பில்லை - தமிழக காவல்துறை

Webdunia|
தமிழகத்தில் 3 ரகசிய முகாம்களில் 150 விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்று இலங்கை திரும்பியதாக அந்நாட்டு இதழ் ஒன்றில் செய்தி வெளியானதற்கு, தமிழக காவல்துறை தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இலங்கையைச் சேர்ந்த நாளேடு ஒன்றில், 150 விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று ரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சிப் பெற்று, பின்னர் அவர்கள், மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குத் திரும்பி, அந்நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய ஆயுத பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை. சில காலத்திற்கு முன்பு இது போன்ற ஒரு தகவல் இலங்கையில் கிளப்பப்பட்டு பின்னர் அது வெளியானதற்கு பழியை இந்திய ஊடகங்களின் மீது தவறாக போட்டு, அச்செய்தி திரும்பப் பெறப்பட்டது.

தமிழ்நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு, மறைமுக அல்லது வெளிப்படையான தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாதபடி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது தீவிரவாதி எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். எனவே, தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவது அல்லது அவ்வாறு நடத்தப்பட அனுமதி வழங்கப்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :