செக் மோசடி வழக்கில் நடிகர் மனோபாலாவுக்கு எதிராக பிடிவாரண்டு

Webdunia|
FILE
செக் மோசடி வழக்கில் சினிமா காமெடி நடிகர் மனோபாலாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில், மெட்ராஸ் சபையர் பிரிண்டர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளர் டோமினிக் சேவியர், சென்னை சைதாப்பேட்டை விரைவு குற்றவியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள செக் மோசடி வழக்கில் கூறியிருப்பதாவது, சென்னை சூளைமேட்டில் உள்ள இன்சைட் எண்டர்டெய்ன்மென்ட் மீடியா லிமிட்டெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாக்ரவி, மனோபாலா மகாதேவன், பொன்னுசாமி ரவிகணேசன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள், தயாரித்த சினிமா படத்தின் போஸ்டர்களை எங்கள் நிறுவனம் அச்சடித்து கொடுத்தது. இதற்காக இந்த3 இயக்குனர்களும் தங்களது நிறுவனத்தின் பெயரில் ரூ.4 லட்சத்துக்கான காசோலையை கையெழுத்திட்டு வழங்கினார்கள்.

இந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவர்களது கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி திரும்பி வந்தது.
இதையடுத்து, பணம் கேட்டு நோட்டீசு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. இவர்கள் வேண்டுமென்றே ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், வங்கி கணக்கில் பணம் இல்லை என்று தெரிந்தும் எங்களுக்கு காசோலையை வழங்கியுள்ளனர். எனவே இன்சைட் எண்டர்டெய்ன்மென்ட் மீடியா லிமிட்டெட் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் 3 இயக்குனர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நாக்ரவி உள்பட 3 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகவில்லை.

இந்த நிலையில், இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கிரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ஐ.லட்சுமணா சங்கர் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, எதிர்மனுதாரர் நாக்ரவி, மனோபாலா உள்பட 3 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மனோபாலா பிரபல சினிமா இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :