சமச்சீர் கல்வி தொடர்பாக அர‌சி‌ன் கொள்கை முடிவை எதிர்க்க முடியாது: மெட்ரிக் பள்ளிகள் சங்கம் மனு

Webdunia| Last Modified புதன், 1 ஜூன் 2011 (13:02 IST)
''சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை யாரும் எதிர்க்க முடியாது'' என்று சென்னை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மெட்ரிக் பள்ளிகள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது.

கட‌ந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியை தமிழக அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து சென்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌‌க்க‌றிஞ‌ர் கே.ஷியாம் சுந்தர் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், கே.பி.கே.வாசுகி, இந்த விடயத்தில் அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை அட்வகேட் ஜெனரல் வழங்க வேண்டும் எ‌ன்று‌ம் சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கில் விளக்கமான பதில் மனுவை 8ஆ‌ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.கிருஸ்துதாஸ் செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ல் மனு‌த் தாக்கல் செய்து‌ள்ளா‌ர்.

அ‌ந்த மனுவில், தமிழகத்தில் 3,500 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அவைகளில் 970 பள்ளிகள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளன. சமச்சீர் கல்வியை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக முன்னாள் துணை வேந்தர் முத்துக்குமரன் தலைமையில் தி.மு.க. அரசு கமிட்டி ஒன்றை அமைத்தது.
மாநில கல்வித் திட்டம், மெட்ரிக் கல்வித் திட்டம், ஓரியண்டல் கல்வித் திட்டம், ஆங்கிலோ இந்தியன் கல்வித் திட்டம் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் சமச்சீர் கல்வித் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் முந்தைய அரசின் கொள்கை. அதற்காக ஒவ்வொரு கல்வித் திட்டத்தின் சார்பில் தலா ஒரு பிரதிநிதியை உறுப்பினராக அரசு நியமித்தது. மெட்ரிக் கல்வித் திட்டம் சார்பில் உறுப்பினராக நான் அதில் பங்கேற்றேன். பலமுறை கூடி கமிட்டியில் ஆலோசனை நடத்தினோம்.
மெட்ரிக் முறையில் பல லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும் அதை நிறுத்தினால் அந்த மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கேடு விளையும் என்று நான் அந்த கமிட்டியில் எதிர்ப்பு கருத்துகளை பதிவு செய்தேன். ஆனாலும் எனது கருத்து ஏற்காமல், அதிகபட்ச ஆதரவை முன்வைத்து சமச்சீர் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்தது.

எங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி கூறிய கருத்துகளை ஏற்காமல் முந்தைய அரசு தன்னிச்சையாக சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தது. தற்போது அந்தத் திட்டத்தை ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பதற்கு, மக்களால் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அ.தி.மு.க. அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இப்படிப்பட்ட கொள்கை முடிவை எடுப்பதற்கு, அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசியல் சாசனத்துக்கு முரணாகவோ, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவோ இல்லாதபட்சத்தில் அரசின் கொள்கை முடிவுகளை எவராலும் சட்டரீதியாக எதிர்க்க முடியாது.
சமச்சீர் கல்வித் திட்டத்தினால் கல்வித் தரம் குறைந்துவிடும் என்று பெரும்பாலான பெற்றோர், மாணவர்கள், பள்ளிகளின் கருத்தின் அடிப்படையில்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பது அரசின் கடமை.

மேலும் முந்தைய அரசால் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியின் தரம்பற்றி ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. அதை நிபுணர் குழு ஆய்வு செய்வது அவசியம். அந்த குழுவின் கருத்தை கேட்காமல் சமச்சீர் கல்விதான் சிறந்தது என்று யாராலும் உறுதி அளிக்க முடியாது.
அரசியல் காரணங்களுக்காக தற்போதைய அரசின் முடிவை குறைகூறுகின்றனர். லட்சக்கணக்கான மெட்ரிக் மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது. எனவே எங்களையும் இந்த வழக்கில் இணைத்து விசாரிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த நிலையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்து அரசு எடுத்த கொள்கை முடிவை தடை செய்யக்கோரி தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் செயலர் கே.சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :