கடும் வறட்சி: தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள்

Erode velusamy| Last Updated: திங்கள், 21 ஏப்ரல் 2014 (15:31 IST)
ஈரோடு வன மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கிறது.
ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர், பர்கூர், கடம்பூர், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி வனப்பகுதி. இதில் சத்தியமங்கலம் மற்றும் ஆசனூர் பகுதி புலிகள் காப்பகமாக திகழ்கிறது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகிறது.
 
இந்த வனப்பகுதியில் பருவமழை பொய்க்காமல் பெய்துவந்த சமயத்தில் வனப்பகுதியில் உள்ள உணவுகளை உட்கொண்டு அங்குள்ள குளம், குட்டைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடித்துக்கொண்டு இந்த வனவிலங்குகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு  வனமண்டலத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பருவமழை பொய்த்தது. இதனால் வனப்பகுதிகள் முழுவதும் வறண்டு காய்ந்து காணப்படுகிறது. 
இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாமல் காய்ந்தது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அலைகிறது. இந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், கிராமங்களில் உள்ள கிணறுகளில் மான்கள் தவறி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :