ஓய்வுபெற்ற ஊழியர்களை நியமிக்கும் ஆணையை திரும்ப பெற வேண்டும்: ஜெயலலிதா

சென்னை| Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜனவரி 2010 (13:23 IST)
ஓய்வுபெற்ற ஊழியர்கள் மீண்டும் பணியில் நியமிக்கும் அரசு ஆணையை அரசு திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிககையில், “இளைஞர்களுக்கு வேலை அளிப்பதற்கு மாறாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் வகையில் அரசு ஆணையை முதல்வர் கருணாநிதி வெளியிடச் செய்திருக்கிறார். இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையே ஒழித்துக்கட்டி விடும்.
இந்த அரசாணையின்படி, தற்போது அரசுத்துறைகளில் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களைக் கொண்டு துறைத் தலைவர்களே ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். இது இளைய சமுதாயத்தினரின் உரிமையை பறிக்கும் செயலுக்கு சமமாகும்.

பொது நலன் கருதி அரசு ஊழியர்களின் பணிகளை நீட்டிக்கவும் மறு வேலைவாய்ப்பினை அளிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. இதன்படி, அரசு விருமபினால் எந்த அரசு ஊழியரின் பணிக் காலத்தையும் நீட்டித்துக் கொள்ளலாம்.
இதுதான் இதுகாறும் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு. நிலைமை இவ்வாறு இருக்க, அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்பிக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்தமாக ஓர் அரசாணை பிறப்பித்திருப்பது மரபு மீறிய செயல். லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயல்.
பணியில் இருக்கும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் செயல். ஏழைகளை தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வைக்கும் செயல். தி.மு.க. விசுவாசிகளை பணி அமர்த்துவதற்கான சதித் திட்டம்.

பொதுவாக, அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். அரசு நிறுவனமாக இருந்தால், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படும். ஆனால் இதுவரை யாருமே கேள்விப்படாத வகையில் அனைத்து மட்டங்களிலும் காலியாக உள்ள பதவிகளை ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
இந்த அரசாணையின் மூலம் அதிகமாக பயனடைய இருப்பவர்கள் தி.மு.க.வினர் மட்டுமே. காரணம், தங்களுக்கு வேண்டியவர்களை ஒப்பந்த முறையில் நியமிக்குமாறு துறைத் தலைவர்களை வற்புறுத்துவர். இவ்வாறு பணியமர்த்தப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தி.மு.க.வினரின் கட்டளைப்படி தான் நடந்து கொள்வார்களே தவிர, பொறுப்புணர்ச்சியுடன் பணியாற்ற மாட்டார்கள்.
மேற்படி அரசாணை மூலம் தி.மு.க.வினரால் பணியமர்த்தப்படும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை வாக்குச் சாவடிகளில் தேர்தல் அலுவலர்களாக நியமித்து, தேர்தலில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை நிகழ்த்த இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வரும் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தச் செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.
இளைய சமுதாயத்திற்கு எதிரான, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற இந்த அரசாணையை வெளியிட்ட அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசாணை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் வரை யறுக்கப்பட்ட ஊதிய விகிதத்தில், இளைஞர்களை கொண்டு முறைப்படி நிரப்பப்பட வேண்டும் என்றும் அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன” எனக் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :