அவதூறு வழக்கில் ஜெ. நேரில் ஆஜராக தடை: உயர் நீதிமன்றம்

சென்னை:| Webdunia| Last Modified திங்கள், 1 ஜூன் 2009 (17:16 IST)
அவதூறு வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சமீபத்தில் நிவாரண உதவி திரட்டியது. இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறைப்படி போய் சேருவதில்லை என்ற ரீதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஓர் கருத்தை தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜூன் 2ம் தேதி (நாளை) ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கு விசாரணையை நிறுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதன், ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 6 வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அரசு பொதுத்துறை செயலாளர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :