வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 மார்ச் 2014 (14:44 IST)

குன்றத்தூர் அருகே மனைவியை எரித்துக்கொன்ற கணவர் கைது

குன்றத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2-வது திருமணத்துக்கு தடையாக இருந்ததால் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Husband burnt his wife
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெயிண்டர் சந்தோஷ்(30). இவருடைய மனைவி தாரா(26). இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து இருவரும் குன்றத்தூர் அடுத்த தண்டலம், அண்ணா நகரில் வசித்து வந்தனர்.
 
கடந்த 2-3-2014 அன்று வீட்டில் உடலில் எரிந்த தீயுடன் தாராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குன்றத்தூர் காவல்துறையினர் தாராவிடம் மரண வாக்குமூலம் பெற்றனர்.
 
அப்போது தாரா, “தனது கணவர் சந்தோஷ்தான் குடித்துவிட்டு வந்து தன் மீது சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததாகவும், இதில் மயங்கி விழுந்த தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகவும்” கூறினார். பின்னர் சிகிச்சை பலனின்றி தாரா, பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்தோசை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் சந்தோஷ், ஒடிசா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் குன்றத்தூர் காவல்துறையினர், ஒடிசா மாநிலம் சென்று அங்கு பதுங்கி இருந்த சந்தோசை துப்பாக்கி முனையில் கைதுசெய்து, விசாரணை நடத்தினர்.
 
அப்போது அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

தாராவுக்கு ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணம் ஆகிவிட்டது. அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. நான் மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள நினைத்தேன். அதற்கு தாரா மறுத்து வந்தார். மேலும் ஊரில் உள்ளவர்கள் என்னை பார்த்து, இன்னொருவரின் மனைவியை அழைத்துச் சென்று விட்டதாக கூறி ஏளனமாக பேசினார்கள்.
 
இதனால் மனம் உடைந்த நான், தாரா உயிரோடு இருந்தால்தானே மற்றொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள முடியாது என்று நினைத்து அவரை கொன்று விட முடிவு செய்தேன். சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்கு சென்று தாராவிடம் தகராறு செய்தேன். அப்போது நான் அடித்ததில் தாரா மயங்கி விழுந்து விட்டார்.
 
உடனே நான், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து அவள் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு வீட்டை பூட்டி வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு சொந்த ஊருக்கு தப்பிச் சென்று விட்டேன்.
 
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் கைதான சந்தோசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.