வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. நினைவலைகள்
Written By Webdunia

ஜனநாயகம் வெற்றிகரமாக செயல்படுவதற்கு அவசியமான நிலைமைகள் - அம்பேத்கர்

FILE
ஜனநாயகம் எப்போதுமே தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு வந்திருக்கிறது. இதுதான் எடுத்த எடுப்பில் நான் கூறவிருக்கும் கருத்தாகும். நாம் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் ஜனநாயகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கிரேக்கர்கள் அத்தகைய ஜனநாயகத்தை பற்றிக் குறிப்பிட்டார்கள். ஆனால் சுண்ணாம்பு, பாலடைக் கட்டியிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறதோ அவ்வாறே அதீனிய ஜனநாயகம் மாறுபடுகிறது என்பதை எல்லோரும் அறிவர். அத்தகைய ஜனநாயகம் மக்களில் 50 சதவீதத்தை அடிமைகளாகக் கொண்டதாகும். இவ்வாறு அடிமைகளாக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லை. நமது ஜனநாயகம் அதீன ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதில் ஐயமில்லை.

உங்கள் கவனத்துக்கு நான் பூர்வாங்கமாகக் கொண்டுவர விரும்பும் இரண்டாவது விஷயம் எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதாகும். இங்கிலாந்தின் வரலாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 1688 ஆம் வருடப் புரட்சிக்கு முன்னர் இருந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் 1688ஆம் வருடப் புரட்சிக்கு பின்னர் வந்த இங்கிலாந்தின் ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று எவரும் கூறமுடியாது. இதேபோல் முதலாவது சீர்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்ட போது 1688க்கும் 1832க்கும் இடையே நிலவிய பிரட்டிஷ் ஜனநாயகமும் 1832ஆம் வருடச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு நிலவிய ஜனநாயகமும் ஒரே மாதிரியானது என்று யாரும் கூற முடியாது. ஜனநாயகம் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது.

உங்கள் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் மூன்றாவது விஷயம் ஒன்றுள்ளது. ஜனநாயகம் தனது வடிவத்தில் மாறிக் கொண்டிருப்பது மட்டுமின்றி, நோக்கங்களிலும் மாறிய வண்ணம் இருக்கிறது. பண்டைக்கால பிரிட்டிஷ் ஜனநாயகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஜனநாயகத்தின் குறிக்கோள் என்னவாக இருந்தது? மன்னனைக் கட்டுப்படுத்த வேண்டும், மட்டுப்படுத்த வேண்டும், அவனுக்குள்ள தனி அதிகாரங்கள் என இப்போது அழைக்கப்படும் அதிகாரங்களை மன்னன் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பதே அதன் குறிக்கோளாக இருந்தது. சட்டம் இயற்றும் ஓர் அமைப்பாக நாடாளுமன்றம் இருந்தபோதிலும் "மன்னன் என்ற முறையில் சட்டங்கள் இயற்ற எனக்குத் தனி அதிகாரம் உண்டு. எனவே நான் இயற்றும் சட்டம் செல்லுபடியாகும்" என்று கூறுமளவிற்கு மன்னன் சென்றான். மன்னனின் இவ்வாறான தன் முனைப்பான அதிகாரம்தான் ஜனநாயகம் தோன்றுவதற்குக் கதவு திறந்துவிட்டது.

இன்று ஜனநாயகத்தின் குறிக்கோள் என்ன? இன்றைய ஜனநாயகத்தின் குறிக்கோள் யதேச்சதிகார மன்னன் மீது கட்டுப்பாடு செலுத்துவதல்ல. மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே குறிக்கோளாகும். ஜனநாயகத்தின் குறிக்கோளில் இது அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவேதான் நான் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு தலைப்பு தருவதில் நவீன ஜனநாயகம் வெற்றி பெறுவதற்கு அவசியமான நிலைமைகள் என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

ஜனநாயகம் என்று கூறும்போது அதற்கு நாம் என்ன பொருள் கொள்கிறோம்? மேலே செல்வதற்கு முன்னர் இது குறித்து நமக்குத் தெள்ளத் தெளிவான புரிஉணர்வு வேண்டும். அரசியல் விஞ்ஞான எழுத்தாளர்கள், தத்துவ முனிவர்கள், சமூகவியலாளர்கள் முதலானோர் ஜனநாயகம் என்பதற்கு விளக்கம் தந்திருப்பது உங்களுக்குத் தெரியும். எனது கருத்தை விளக்குவதற்கு இவற்றில் இரண்டு இம்சங்களை மட்டுமே எடுத்துக்கூற விரும்புகிறேன்.

அரசியல் சாசனம் குறித்து வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலை உங்களில் எவராது படித்திருப்பீர்களா என்பது எனக்குத் தெரியாது. இது ஜனநாயகம் பற்றி ஒரு தெளிவான கருத்தினை வழங்க எடுத்துக்கொண்ட முதல் முயற்சியாகும். வால்டர் பேகேஹாட் எழுதியுள்ள அந்த நூலை நீங்கள் படித்தால் விவாதத்தின் மூலம் அரசாங்கம் நடத்துவதே ஜனநாயகம் என்று அவர் விளக்கியிருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறுதான் ஜனநாயகம் என்பதற்கு அவர் பொருள் கொள்கிறார். ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகத்துக்கு அளிக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கத்திய ராஜ்யங்களை வெற்றிகொண்ட பிறகு கெட்டிஸ்பர்கில் நிகழ்த்திய புகழ்பெற்ற சொற்பொழிவில் மக்களால் மக்களைக் கொண்டு நடைபெறும் மக்கள் அரசாங்கம் என்று ஜனநாயகத்துக்கு அவர் விளக்கம் தந்தார்.

ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயக‌த்து‌க்கு நா‌ன் அ‌ளி‌க்கு‌ம் ‌விள‌க்கமாகு‌ம். இ‌வ்வாறுதா‌ன் ஜனநாயகத்தை நான் காண்கிறேன். ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவோரால், மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வருவதை ஜனநாயகம் சாத்தியமாக்குமானால், இரத்தம் சிந்தும் முறையைப் பின்பற்றாமல் மக்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்வார்களானால் அதுதான் ஜனநாயகம் என்று கூறுவேன். எது ஜனநாயகம் என்பதை நிர்ணயிப்பதற்கு இதுதான் உண்மையான தேர்வாய்வாகும் உரைகல்லாகும்.

இது கடுமையான சோதனையாக இருக்கவேண்டும். ஒரு பொருளின் தரத்தை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அதனைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இத்தகைய ஜனநாயகம் எவ்வாற வெற்றி பெற முடியும்? ஜனநாயகம் எனும் இந்தப் பொருள் குறித்து எத்தனையோ பேர் எழுதி இருக்கின்றனர். ஆனால் ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்வதற்கு எத்தகைய நிலைமைகள் தேவை என்பது குறித்து இவர்களில் எவரும் உருப்படியான யோசனைகள் எவற்றையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? வரலாற்றைப் படிக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டம் எது என்பதைக் கண்டறிந்து நமது சொந்த முடிவுக்கு வரவேண்டும்.