செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. நினைவலைகள்
Written By Webdunia

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே... உழைக்கும் பெண்களுக்கான ஒரு மெலடி!

உலக மகளிர் தினம் என்றவுடன் நகர நெரிசலில் பரபரப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் சட்டென நம் நினைவுக்கு வருவது வழக்கம். காரணம் ஊடகங்கள் உருவாக்கும் பிம்பங்கள் இப்படியாகத்தான் இருக்கிறது.

கிராமங்களில் அதுவும் வறண்ட கிராமங்களில் பாடுபடும் பெண்களின் பிம்பங்கள் ஊடகங்களின் 'பிம்ப உருவாக்கத்திலிருந்து' மறைந்து 2 பத்தாண்டுகள் ஆகிவிட்டது எனலாம்.

இந்த நிலையில் உலக மகளிர் தினமான இன்று உழைக்கும் பெண்களைப் பற்றி நாம் நினைத்துப் பார்ப்பது நல்லது. அதுவும் பிரதிநிதித்துவம் இல்லாமல் நாம் நேரடியாக நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத்தான் உள்ளது.

இந்த வீடியோவில் வரும் பாடல், தென் மேற்குப் பருவக்காற்று படத்தில் வரும் ஒரு அருமையான பாடல். பாடலின் அருமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் வைரமுத்துவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!

'வானம் எனக்கொரு போதி மரம்' என்று 'நிழல்கள்' ஆக துவங்கியவர் சாகித்ய அகாடமி விருது பெறும் அளவுக்கு உயர்ந்துள்ளார். கருத்தம்மாவில் 'போறாளே பொன்னுத்தாயி' என்ற அருமையான சோகப்பாடலை எழுதி அதற்காக மறைந்த குயில் குரலாள் ஸுவர்ணலதா தேசிய விருதும் பெற்றார்.

'தென் மேற்குப் பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாரல்' என்று கருத்தம்மாவில் இன்னொரு பாடல் உண்டு அந்த அருமையான பாடல் வரிகளுக்கும் சொந்தக்காரர் வைரமுத்துதான்.

இந்த நிலையில் அந்தப் பாடலின் முதல் வரியை டைட்டிலாகக் கொண்டு வந்த இந்தப் படத்தின் டைட்டில் பாடல்தான் இந்த 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே', இசை அமைத்தவர் அறிமுக இசையமைப்பாளர் என்.ஆர். ரஹ்நந்தன். கள்ளிக்காட்டில் உழைக்கும் பெண்களுக்கு ஒரு மேற்கத்திய டியூனை நெருடல் ஏற்படாத வண்ணம் கொடுத்துள்ளார் அவர்.
FILE

பாடல் வரிகள் ஒரு மகன் தாயின் பெருமையை பாடுவது போல் அமைந்துள்ளது. 'தாய்ப்பாலில் மட்டும்தான் தூசி இல்லை' என்ற வரி உண்மையில் வைரமுத்துவின் வைர வரிகளாகும்.

பெண் சிசுக்கொலை இன்னமும் மறைந்து விடாத அவல நிலையில் தாயின் பெருமையைப் பாடும் அதுவும் கள்ளிக்காட்டில் கடின உழைப்பு மேற்கொள்ளும் தாயைப் பற்றி பேசுகிறது இந்தப்பாடல்.

இந்தப் பாடலின் வரியும், டியூனுமே கூட செண்டிமென்டான அதாவது மிகை உணர்ச்சிக்கான தன்மைகள் கொண்டது. ஆனால் மிகை உணர்ச்சி சற்றும் தலை காட்டாமல் மெலடி டியூனுக்கு அருமையாக பாடல் எழுதியுள்ளார் வைரமுத்து.

வைர வரிகளைக் கொண்ட இந்தப் பாடலை எழுதிய வைரமுத்துவுக்கும், படத்தில் கள்ளிக்காட்டு தாயாக வாழ்ந்த சரண்யா பொன்வண்ணனுக்கும், இந்த உணர்வுகளை ஒன்று திரட்டிய படத்தின் சிற்பி சீனு ராமசாமிக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.