லெனின் அகத்தியநாடன்|
Last Updated:
வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (18:56 IST)
1926ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி கியூபாவின் கரும்புத் தோட்டத்தில் பிடல் காஸ்ட்ரோ பிறந்தார். 1941இல் தனது 15ஆவது வயதில், ஃபிடல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.
காஸ்ட்ரோ சிறு வயதில் ஒரு தீவிர கத்தோலிக்கர். ஆனால் பிறகு அவர் ஒரு நாத்திகராக மாறிவிட்டார். 1945ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.
காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும். 1945ஆம் ஆண்டு ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகுதான், அரசியலால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி அரசியலிலும் பங்கு கொண்டார்.
அப்போது, கல்லூரியில் இரண்டு முக்கிய கட்சிகள் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஹொசே மார்த்தியின் ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார். 1952ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாள் பாடிஸ்டா கியூச அரசின் அரியணை ஏறினார்.
பாடிஸ்டா அரசில் அடக்குமுறைகளும், ஊழல்களும் நிறைந்திருந்தன. அதே வேளையில், தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் பிணியிலும், வறுமையில் உழண்டனர். இதனிடையே ஃபிடல் கல்லூரி மாணவர் தேர்தலில் வெற்றி கண்டார். பின்னர், பாடிஸ்டா அரசின் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைய அவரை ராணுவத்தினர் கைது செய்தனர்.
அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.
”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.
அதன் பின்னர், கொரில்லா பானியிலான தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். அப்போது அவருடன் வந்து சேர்ந்தவர்தான் அர்ஜெண்டைனாவை சேர்ந்த எர்னஸ்டோ சே குவேரா. இருவரும் இணைந்து பாடிஸ்டா அரசுக்கு எதிரான கொரில்லா போருக்கு தலைமை தாங்கினர்.
1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றனர்.