பெண் எழுத்தாளர் கமலா தாஸ் மரணம்

Webdunia| Last Modified திங்கள், 1 ஜூன் 2009 (11:59 IST)
தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் கமலா தாஸ் சூரையா நேற்று காலை மரணமடை‌ந்தா‌ர்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா தாஸ். ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய, மை ஸ்டோரி, சம்மர் இன் கல்கத்தா, தி டிசென்டன்ட்ஸ் போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

குறிப்பாக, மை ஸ்டோரி என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. மலையாள, ஆங்கில மொழிகளில் அவருக்கென ஏராளமான ரசிகர் வட்டாரம் உள்ளது. இலக்கியத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். செக்ஸ், காதல், நம்பிக்கை துரோகம் போன்றவை குறித்து துணிச்சலாக புத்தகங்கள் எழுதியதால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர்.
ரிசர்வ் வங்கி முன்னாள் அதிகாரியான அவரது கணவர் மாதவ தாஸ் ‌சில ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு மரணமடை‌ந்த ‌பிறகு, புனே‌வி‌ல் கமலா குடியேறினார். 75 வயதான அவருக்கு முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவர் காலமானார். அவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்களில் நாலப்பாடு என்பவர் பிரபல மலையாள பத்திரிகையாளர் ஆவார்.
கடந்த 1984-ம் ஆண்டு லோக் சேவா கட்சி என்ற கட்சியை தொடங்கி பாராளுமன்ற தேர்தலில் கமலா போட்டியிட்டார் என்பதும், 1999-ம் ஆண்டில் இஸ்லாம் மதத்துக்கு மாறி கமலா சூரையா என பெயரை மாற்றிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

புனே நகரில் மரணமடைந்த எழுத்தாளர் கமலா தாஸ் உடல், கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டு நாளை அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. அவரது கடைசி விருப்பப்படி இஸ்லாம் மத முறைப்படி இறுதி சடங்கு நடைபெறும்.
இது குறித்து கேரள கலாசார துறை மந்திரி எம்.ஏ.பேபி கூறுகையில், கேரளாவின் கவிஞரான கமலா தாஸ் சூரையாவின் உடல், விமானம் மூலமாக கேரளா கொண்டு வரப்படும். அதைத் தொடர்ந்து, ஆலப்புழா மற்றும் கொல்லம் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். ஜுன் 2-ந் தேதி அன்று பாளையம் ஜூம்மா மசூதியில், முழு அரசு மரியாதையுடன் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :