நண்டு தக்காளி குழம்பு

Webdunia| Last Modified செவ்வாய், 2 ஏப்ரல் 2013 (17:16 IST)
நண்டை குழம்பாக, குருமாவாக, ரசமாக செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அனால் இவை அனைத்திலிருந்தும் சுவையில் வேறுப்பட்டது இந்த நண்டு தக்காளி குழம்பு.

நண்டு தக்காளி குழம்பு செய்ய தேவையானவை:

நண்டு - 1/2 கிலோ
டால்டா - 100 மி.லி.
வெள்ளைப்பூண்டு - 25 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
புளி - 30 கிராம்
தக்காளிப்பழம் - 1/4 கிலோஉப்பு - தேவையான அளவு

செய்முறை:

நண்டைச் சுத்தப்படுத்தி நன்றாக அலசிக் கொள்ளவும். 100 கிராம் வெங்காயத்தை மட்டும் தனியே எடுத்துத் தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது வெள்ளைப் பூண்டை சரிசமமாகப் பிரித்துக் கொள்ளவும். ஒரு பகுதியை மட்டும் எடுத்து தோல் உரித்து அம்மியில் வெங்காயத்தையும், பூண்டையும் வைத்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி அதில் புளியைப் போடவும். சிறிது நேரம் வைத்து நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இந்த சாற்றை நன்றாகப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். புளித்தண்ணீரை அரைத்த பூண்டு, வெங்காயம் விழுதுடன் கலந்துகொள்ளவும்.
இப்போது மீதியுள்ள 50 கிராம் வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக அரிந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் டால்டாவை ஊற்றி அடுப்பில் ஏற்றவும். டால்டா காய்ந்து புகை வரும் வேளையில் மீதியுள்ள பூண்டை உரித்து நீளவாக்கில் அரிந்து வெங்காயத்துடன் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் சுத்தம் செய்யப்பட்ட நண்டு, மிளகாய்ப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி ஆகிய பொருட்களைப் அதில் சேர்த்து கிளரவும்.
ஒரு நிமிடம் கழித்து அதில் அரை லிட்டர் நீரை ஊற்றவும். பின்னர் தட்டு வைத்து மூடி அடுப்பை நிதானமாக எரிய விடவும். நன்றாகக் கொதிக்கவிட்டு, நண்டு நன்றாக வெந்த பிறகு புளிச் சாற்றுக் கலவையை இதனுடன் சேர்க்கவும்.

இது கொதி வந்து பத்து நிமிடம் ஆனவுடன் பொடியாக நறுக்கப்பட்ட தக்காளிப் பழத்தை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
குழம்பு கொதித்த வாசனை வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். ருசி அதிகமாக இருக்க வேண்டுமென்றால் இதனுடன் 100 மி.லி. அளவு கெட்டியான தேங்காய்ப்பாலை எடுத்துச் சேர்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :