திலாப்பியா மீன் பஜ்ஜி

Webdunia|
சதா காய்கறி பொரியல் வகைகளா செஞ்சு அலுத்துவிட்டதா? சாதத்திற்கு சைடு-டிஷ்ஷாக தொட்டுக் கொள்ள இதோ ஒரு புதிய வெரைட்டி. பிஷ் பஜ்ஜி. நல்லா மொறு மொறுன்னு சூடா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை வெறுமனே ஸ்நாக் போலவும் சாப்பிடலாம். அல்லது சாத வகைகளுக்கு தொட்டுக்கொள்ள சைடு-டிஷ்ஷாகவும் செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

திலாப்பியன் மீன்(Tilapia fillets) - 2
மைதா மாவு - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 3/4 டீ ஸ்பூன்
ஓமம் - 1/4 டீ ஸ்பூன்
சிவப்பு புட் கலர் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1/2 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப் (பொரிக்க)

Fillet என்று சொல்லப்படும் சுத்தம் செய்த எலும்புகள் நீக்கப்பட்ட மீனில் இதைச் செய்யவும். நாம் மீனை நான்-ஸ்டிக் பேனில் ஷாலோ ப்ரை (Shallow fry) தான் செய்யப் போகிறோம். 1/4 கப் எண்ணெயே இந்த ரெசிபிக்கு போதுமானதாக இருக்கும். குறைவான எண்ணெய் பயன்படுத்தி செய்வது நல்லது. மீன் பொரித்த எண்ணெயை மீண்டும் எதற்கும் பயன்படுத்த இயலாது.
மீனை 2 அங்குல நீளத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தடிமன் 1/2 அங்குலம் இருக்குமாறு பார்த்து நறுக்கிக் கொள்ளவும். மீன் மிகவும் தடியாக இருந்தால் வெளிப்புறம் விரைவில் வெந்துவிடும். உள்ளே சரியே வேகாது.

ஒரு பவுலில் மைதா மாவு,பேக்கிங் பவுடர்,ஓமம்,சிவப்பு புட் கலர்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். கெட்டியான மாவாக கரைத்துக் கொள்ளவும்.(பஜ்ஜி மாவு போல கெட்டியான மாவு.) ஒரு அகலமான நான்-ஸ்டிக் பேனை எடுத்துக் கொள்ளவும். அதில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும்.

மீன் துண்டுகளை கரைத்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.
எண்ணெய் சூடான பின் மிதமான தணலில் வைத்துப் பொரிக்கவும். இருபுறமும் திருப்பிவிட்டு நன்கு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.
வடிதட்டில் போட்டு எண்ணெயை நன்றாக வடித்து பின் சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:
சாட் மசாலா மேலே சிறிது தூவி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த பஜ்ஜியை கெட்சப் அல்லது ஹாட் சாஸ் தொட்டும் சாப்பிடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :