வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சமூக அவல‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (16:08 IST)

’காற்று என்னை எடுத்துச் செல்லட்டும்’ - கற்பழிக்க முயன்றவனை கொன்ற இளம்பெண்ணின் கடைசி செய்தி

ஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார்.
 

 
ஏன் இந்த இளம்பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா? 2009ஆம் ஆண்டு டெஹ்ரானை சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரி இவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, தனது கையில் வைத்திருந்த பேனாவால் அவரை குத்தியுள்ளார்.
 
இதில் அந்த அதிகாரி மரணமடைந்து விட்டார். இதனால் கொலை குற்றவாளியாக ஈரானிய அரசு ரேஹானே ஜப்பாரியை தூக்கிலிட்டது.
 
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில். தூக்கிலிடப்பட்ட ரேஹானே ஜப்பாரி, தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்து இருந்தார். தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல் வடிவில் வெளியாகி இருந்தது.
 
அது அனைவரது மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. நமது சட்டங்கள் எவ்வளவு கல் நெஞ்சோடும், மனசாட்சி அற்ற தன்மையோடும், வறட்டுத் தன்மையோடும் இருக்கின்றன என்பதற்கான சிறு உதாரணம்தான் இது.
 
அதன் தமிழாக்கம் கீழே:
 
"அன்பிற்கினிய ஷோலே [அவரது அம்மா பெயர்], எவ்வாறு ஈரானிய ஆட்சியின் சட்டதிட்டங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை இப்போது கற்றுக்கொண்டேன்.
 
நான் எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?
 
உனக்கோ அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை?
 
19 வருடங்கள் வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம் அனுமதித்திருக்கிறது. அந்த அச்சுறுத்தும் கொடிய இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டு இருக்கலாம். அதன்பின் சிறிது நாட்கள் கழித்து, காவல் துறையினர் எனது உடலை கண்டுபிடித்து, பிரேத பரிசோதனை அதிகாரிகள் நான் எவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டேன் என்பதை விளக்கி இருப்பார்கள்.
 
ஆனால், அதன் பிறகு என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன் பின் சில ஆண்டுகள் இதை நினைத்து நீ அவமானத்தால் துன்பட்டி போயிருப்பாய். அடுத்த சில ஆண்டுகள் கழித்து நீயும் இறந்து போயிருப்பாய்.
 
எப்படியோ, இப்போது கதை மாறியுள்ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. கொடுமையான ’ரே’ சிறையின் கல்லறையில், தனியாக எனக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைவிதிக்கு உள்ளானதற்கான புகார் செய்ய வேண்டாம். இறப்பு வாழ்வின் முடிவு கிடையாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

உங்களுக்கு நினைவிருக்கிறதா நாங்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து நீங்கள் குறிப்பிட்டது? உங்களது அனுபவம் தவறானது. இந்த நிகழ்ச்சி நடந்ததற்குப் பிறகு, நான் கற்றது எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.
 

 
நீதிமன்றம் என்னை இரக்கமில்லா கொலைகாரியாகவும், கொடுமையான குற்றவாளியாகவும் கருதுகிறது. என்னிடம் கண்ணீர் இல்லை. பிச்சை எடுக்கவுமில்லை. நான் சட்டத்தை நம்பியதிலிருந்து எனது தலைகுணிந்து அழவில்லை.
 
நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் கொசுக்களைக் கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை அதன் உணர் கொம்புகளை பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றி இருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக்கிறேன்.
 
எப்படியாகிலும் சரி, நான் இறப்பதற்கு முன் உங்களை ஒன்று வேண்டுகிறேன். உங்களால் முடிந்தவரை எந்த வழியிலாவது, எனக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உலகத்திடமிருந்து, இந்த தேசத்திலிருந்து, உங்களிடமிருந்து நான் வேண்டிக்கொள்ளும் ஒன்றாக இதுதான் இருக்கும். இதற்காக உங்களுக்கு நேரம் தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும்.
 
நீதிமன்றத்தில் என்னுடைய வேண்டுகோளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். சிறைத்தலைவர் ஒப்புதலோடு உங்களுக்கு என்னால் சிறையிலிருந்து எந்த கடிதத்தையும் எழுத முடியாது. ஆகையால் மீண்டும் என்னால் நீங்கள் பாதிப்படையக்கூடும்.
 
அன்பு ஷோலே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பதற்காக அழக்கூடாது. என்னுடைய தாயே, எனது சிந்தனை மாறிவிட்டது. அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம். என்னுடைய வார்த்தைகள் முடிவில்லாதது.
 
எனது அன்பிற்கினிய தாயே, அன்பு ஷோலே, எனது வாழ்வை விட நீயே எனக்கு விருப்பமானதாய் இருந்தாய். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, எனது இளமையான இதயமோ வெறும் புழுதிக்குள் எரியப்பட வேண்டாம்.
 
நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப்படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர்களுக்கு பரிசாக அளித்துவிடுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
 
என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனையும் செய்ய வேண்டாம்.
 
நான் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம். எனக்காக நீங்கள் அங்கு வந்து வேதனைப்பட்டு அழத் தேவையில்லை. எனக்காக கருப்புத் துணியால் உன்னை மூடிக்கொள்வதை நான் விரும்பவில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்து விடுவது நல்லது. காற்று என்னை எடுத்து செல்லட்டும்’'.

தமிழில்: லெனின் அகத்தியநாடன்