வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (15:49 IST)

ஆர்.எஸ்.எஸ். நாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள் - இந்து மகா சபை தாக்கு

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நாட்டை மட்டுமல்ல, இந்துக்களையும் காட்டிக் கொடுத்த துரோகிகள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை இந்து மகா சபை குற்றம் சாட்டியுள்ளது.
 
கடந்த ஞாயிறன்று மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை, வீர வணக்க நாளாக இந்து மகாசபைக் கடைப்பிடித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
 
இதையொட்டி கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் எம்.எஸ். வைத்யா, “கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை வீரவணக்க நாளாக எந்த அமைப்பு கொண்டாடுகிறது என எனக்கு தெரியாது; ஆனால், கோட்சே ஒரு கொலையாளி; அந்த கொலையாளிக்கு மரியாதை செலுத்துவதையோ, கவுரவப் படுத்துவதையோ நான் கடுமையாக எதிர்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.
 
இதனால் கடும் எரிச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளான இந்து மகா சபை தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாடியுள்ளது.
 
எம்.எஸ்.வைத்யாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள இந்து மகா சபையின் தேசிய துணைத் தலைவர் அசோக் சர்மா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நாட்டை மட்டுமல்ல இந்துக்களையும் காட்டிக் கொடுத்த துரோகிகள்; ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்பே இந்து மகாசபை என்பதை சிலராவது அறிந்திருப்பார்கள்;
 
ஆனால், 1948-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், இந்து மகாசபையுடனான தொடர்பு களை துண்டித்துக் கொண்டனர்; அவர்கள் நேருவுடன் கை கோர்த்துக் கொண்டு காந்தி கொலை விவகாரத்தில் இருந்து விலகி நின்றனர்;
 
காந்தி கொலை சம்பவத்தின் போது இந்து மகாசபையினர் சித்ரவதைகளுக்கு ஆளானார்கள்; ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் துரோகிகளாக மாறி இந்து மகாசபையை விட்டு ஓடி ஒளிந்தனர்;
 
இன்றைக்கும் கூட, ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது, பா.ஜ.க.வை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றி கவலைப்படுகிறதே தவிர, இந்துக்களின் கவுரவத்தைக் காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை” என்று கடுமையாக சாடியுள்ளார்.