வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : ஞாயிறு, 11 மே 2014 (12:00 IST)

வாரணாசி உள்ளிட்ட 41 தொகுதிகளுக்கு நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

மக்களவை தேர்தலில் கடைசி கட்ட வாக்குப் பதிவு, 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி கட்ட தேர்தலில் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று சூறாவளி பிரசாரம் செய்தனர்.
 
மொத்தம் 543 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்தது. இதில் அசாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் ஒரு தொகுதிக்கும் (மொத்தம் 6 தொகுதிகளில்) வாக்குப் பதிவு நடைபெற்றது. 2 ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடந்தது. இதில் 7 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. 3வது கட்டமாக ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த தேர்தலில் 91 தொகுதிகளுக்கும், 12 ஆம் தேதி நடந்த 4 ஆம் கட்ட தேர்தலில் 7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது.  
 
ஐந்தாவது கட்ட தேர்தல்தான் மிக அதிக தொகுதிகளில் நடந்துள்ளது. அதாவது ஏப்ரல் 17 ஆம் தேதி 120 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. 24 ஆம் தேதி நடந்த 6 ஆவது கட்ட தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்த 7 ஆவது கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 8 ஆவது கட்டமாக ராகுல் காந்தி போட்டியிட்ட அமேதி தொகுதி உள்பட மொத்தம் 64 தொகுதிகளில் கடந்த மே 7 ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. மொத்தம் 502 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தற்போது கடைசி கட்டமாக உத்தரப் பிரதேசத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி உள்பட 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும் பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 41 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நடைபெற உள்ள 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடைசி கட்டத் தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் மூன்று மாநிலங்களில் நேற்று உச்ச கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டன. 
 
பொதுவாக முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வதில்லை. ஆனால், ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாரணாசி தொகுதியில் நேற்று ராகுல் பிரசாரம் செய்தார். வாரணாசியில் மோடியை தோற்கடிக்க ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உள்ளிட்ட பலரும் வியூகம் வகுத்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், வாரணாசி தொகுதி மீது நாட்டில் உள்ள அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. 
 
மூன்று தினங்களுக்கு முன்பு வாரணாசியில் மோடியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது. ஆனால், என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறிய மோடி, ஆணையத்தின் தடையை பற்றி கவலைப்படாமல் வாரணாசியில் பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார். தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரேயும் வாரணாசியில் பனாரஸ் இந்து பல்கலை கழகத்திற்க்கு அருகேயும் பாஜ கட்சியினர் தர்ணா செய்தனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணத்திற்காகவே அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் விளக்கம் அளித்தார். 
 
இந்நிலையில், ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நேற்று மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரசாரம் செய்தனர். மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் மற்ற தொகுதிகளிலும் கடைசி கட்ட பிரசாரத்தில் அனல் பறந்தது. கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிந்தது. 
 
கடைசி கட்டத் தேர்தல் முடிந்ததும் 41 தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். நாடு முழுவதும் 543 தொகுதிகளில் 9 கட்டமாக பதிவான வாக்குகள் மே 16 ஆம் தேதி ஒரே நாளில் எண்ணப்படும். அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.