வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

மோடியை ஆண்மையற்றவர் என்ற விமர்சனம் பாராட்டுக்கு உரியதல்ல - சல்மான் குர்ஷித்துக்கு ராகுல் கண்டிப்பு

மோடியை ஆண்மையற்றவர் என விமர்சித்த சல்மான் குர்ஷித்தை ராகுல் காந்தி கண்டித்தார். இத்தகைய வார்த்தை பாராட்டத்தகுந்தது அல்ல என ராகுல் கூறியுள்ளார்.
FILE

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது பரூக்காபாத் தொகுதியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசுகையில், குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த இனக்கலவரங்களை அடக்க முடியாத மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி ஆண்மையற்றவர் என கடுமையாக விமர்சித்தார். பிரதான எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளரை ஒரு மத்திய அமைச்சர் இப்படி தரம் தாழ்ந்து விமர்சித்தது, அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.

இதற்கு பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சல்மான் குர்ஷித் தான் கூறியதை நியாயப்படுத்தினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில்,..

“கலவரங்களை அடக்குகிற ஆற்றல் அவருக்கு இல்லை. இதை ஆண்மையில்லாத தன்மை என அழைப்பதில்லையா? 'இம்பொட்டன்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்கு அரசியல் அகராதியில் அர்த்தம், ஒன்றை கையாளும் தகுதி இல்லாதவர் என்பதுதான்” என கூறினார்.

இந்நிலையில், வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பதற்காக டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடந்த பிரச்சாரக்குழு கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.
FILE

அப்போது மோடி பற்றிய சல்மான் குர்ஷித்தின் விமர்சனம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ராகுல் காந்தி அவரை சூசகமாகக் கண்டித்தார். அப்போது அவர், “இந்த வகையிலான விமர்சனத்தை, இத்தகைய வார்த்தையை நான் பாராட்ட மாட்டேன்” என கூறினார்.