வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மரண தண்டனையை உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
FILE

டெல்லியில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி, தனது தோழனுடன் வீடு திரும்ப ஒரு தனியார் பேருந்தில் ஏறிய மருத்துவ மாணவி, பேருந்தில் இருந்த 6 பேரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு தெருவில் வீசப்பட்டார்.

FILE
அவரது நண்பரும் தாக்கப்பட்டு உதவிக்காக மன்றாடி 45 நிமிடங்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இத்தகைய கொடூரமான தாக்குதலை கண்டதே இல்லை என தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சை மேற்கொண்ட அப்பெண் 10 நாட்கள் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண் 3 நாட்களில் பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் நடந்த நாளிலிருந்தே மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் விரைவாக நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி போராட்டங்கள், மறியல்கள் நடைபெற்றன.

இந்த வழக்கில் காவல் துறையால் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொருவருக்கு 17 வயது என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள முகேஷ், வினய் ஷர்மா, பவன் மற்றும் அக்ஷய் தாகுர் ஆகிய நால்வருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நால்வரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.