வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 13 மே 2014 (11:00 IST)

கேரளாவில் அரசியல்வாதிகள் அணை உடைந்துவிடும் என பீதியை கிளப்பி வருகிறார்கள் - முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்

கேரளாவில் அரசியல்வாதிகள் முல்லை பெரியாறு அணை உடைந்துவிடும் என பல ஆண்டுகளாக பீதியை கிளப்பி வருகிறார்கள் என்று முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கூறியுள்ளார்.
 
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு கேரளாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தையும் கூட்டி ஆலோசித்தார்.
 
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை முல்லை பெரியாறு அணை உயர்மட்ட குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் நீதிபதியும் கேரளாவை சேர்ந்தவருமான கே.டி. தாமஸ் வரவேற்று கருத்து தெரிவித்தார்.
 
இதற்கு கேரள அமைச்சர்கள் பி.ஜே.ஜோசப், மாணி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் கேரளாவுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், மக்களை ஏமாற்றி விட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
 
இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை போராட்டக்குழுவுக்கு தலைமை தாங்கி நடத்தி வரும் பாதிரியார் ஜாய் நிரப்பலும் நீதிபதி கே.டி. தாமசை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–
 
முல்லை பெரியாறு அணை மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாக அணை வல்லுனர் குழு, 7 நீர்பாசன துறை என்ஜினீயர்கள், 11 நீதிபதிகள் என ஒரு குழுவினரே கருத்து தெரிவித்து உள்ளனர்.
 
ஆனால் கேரளாவில் அரசியல்வாதிகள் அணை உடைந்துவிடும் என பல ஆண்டுகளாக பீதியை கிளப்பி வருகிறார்கள்.
 
இதை முதலில் நிறுத்த வேண்டும். முல்லை பெரியாறு அணை உண்மையிலேயே பலமாக உள்ளது. இதனை பத்திரிகைகளும், சமூக ஊடகங்களும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கேரள அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க என்னை அணை உயர்மட்ட குழுவில் நியமிக்கவில்லை. இதற்காக கேரள அரசிடம் இருந்து நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.
 
அணை பாதுகாப்பாக உள்ளது என்பது வெளிப்படையாக தெரிந்துவிட்டது. இதை மூடி மறைக்க முடியாது. சிலர் பாராட்டுவார்கள், கைதட்டுவார்கள் என்பதற்காக உண்மையை மூடி மறைக்க முடியாது.
 
உச்சநீதிமன்ற தீர்ப்பால் கேரள அரசும், மக்களும் மகிழ்ச்சி அடைய வேண்டுமே தவிர கவலை பட தேவையில்லை.
 
என்னை பற்றி சிலர் அவ தூறாக பேசுவது பற்றியும், விமர்சிப்பது குறித்தும் எனக்கு கவலையில்லை என்று அவர் கூறினார்.
 
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்பதற்காக திருவனந்தபுரத்தில் நேற்று முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
 
இதில் எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், துணைத்தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பன்னியன் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் கேரளா சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.