ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன்

Webdunia| Last Modified வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (16:01 IST)
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக் கடனுக்கான முழு வட்டியையும் மத்திய அரசே மானியமாக ஏற்றுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

முழு வட்டி மானியத்தை பெற மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 4.5 லட்சமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு தொழில் மற்றும் தொழில்நுட்பக் கல்வியானாலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதற்கு, இந்த வட்டி மானியம் உதவும் என்றும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் இத்திட்டத்தால் மொத்தம் 5 லட்சம் மாணவர்கள் பலனடைவார்கள் என்றும் கூறிய சிதம்பரம், கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும், 24 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :