காதலன் உயிரிழந்த சோகத்தில் 11 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட காதலி


Suresh| Last Updated: செவ்வாய், 8 டிசம்பர் 2015 (09:12 IST)
பெங்களூருவில், தனது காதலன் உயிரிழந்த சோகத்தில் 11 ஆவது மாடியில் இருந்து குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

 

 
பெங்களூரு பேட்ராயனபுரா அருகே வசித்து வந்தவர் பூஜா. 21 வயதுடைய இவர், கஸ்தூரிபா சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் 11ஆவது மாடிக்கு சென்ற பூஜா அங்கிருந்து கீழே குதித்தார்.
 
இதனால், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கப்பன் பார்க் காவல்துறையினர் மற்றும் மத்திய மண்டல துணை ஆணையர் உள்ளிட்டோர் பூஜாவின் உடலை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
 
அப்போது பூஜா எழுதி வைத்திருந்த ஒரு உருக்கமான கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், "தற்கொலை முடிவை நான் எடுத்திருக்கக்கூடாது. ஆனாலும் அப்படி செய்ய வேண்டியதாகி விட்டது" என்று மட்டும் பூஜா எழுதி இருந்தார்.
 
இதற்கிடையில், பூஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பூஜா வேலை செய்த அதே நிறுவனத்தில் ஜே.சி.நகரைச் சேர்ந்த சரண் என்பவர் வேலை செய்து வந்ததாகவும், அவர்கள் இருவருக்கும் பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு சரணும், பூஜாவும் காதலித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில், பெங்களூரு புறநகர் நந்திமலைக்கு தனது நண்பர்களுடன் சென்ற சரண், அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
 
இதைத் தொடர்ந்து, நேற்று காலை சரணின் இறுதி சடங்கு நடந்துள்ளது. அங்கு சென்றுவிட்டு, வேலைக்கு வந்த பூஜா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
 
காதலன் விபத்தில் பலியானதால் மனம் உடைந்த பூஜா தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இது குறித்து கப்பன் பார்க் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :