ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு அறிமுகமான வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை தற்போது பல தொழில்முனைவோர் மற்றும் ஊழியர்களின் விருப்பமாக மாறிவிட்டது. ஆனால், ஸ்நேகா என்ற பெண் தனது நிறுவனத்தின் ஒரு வார பயிற்சி திட்டத்திற்காக முதல்முறையாக வீட்டில் இருந்து வேலை செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த குறுகிய கால மாற்றம் தனது வழக்கமான தினசரி வாழ்க்கையிலும், மனநலத்திலும் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியப்புடன் பதிவிட்டுள்ளார்.
அலுவலகத்திற்கு பயணம் செய்யும் நேரம் மிச்சமானதால், தமக்கு காலை நடைபயிற்சி செல்லவும், உடற்பயிற்சிக் கூடம் செல்லவும், புத்தகம் படிக்கவும், மாலை நேரத்தை அமைதியாக தேநீருடன் ரசிக்கவும் நேரம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த மாறுதலை எதிர்நோக்க தயாராக இல்லை என்றாலும், வார இறுதியில் தனது உற்பத்தி திறன் குறையவில்லை என்றும், மாறாக முந்தையதை விட கூடுதலாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதிக ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் உணர்ந்த அவர், மக்கள் ஏன் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை கடுமையாக விரும்புகிறார்கள் என்பதை இப்போது தான் புரிந்துகொண்டதாக கூறியுள்ளார். அலுவலக பயணம் மற்றும் நெரிசலை தவிர்ப்பதன் மூலம் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்த முடியும் என்பதை இந்த அனுபவம் அவருக்கு உணர்த்தியுள்ளது.
Edited by Siva
