திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 11 மார்ச் 2026 (14:58 IST)

சாலை பள்ளத்தில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்.. மூளைச்சாவு அடைந்த பெண் உயிர் பிழைத்த அதிசயம்..!

சாலை பள்ளத்தில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்.. மூளைச்சாவு அடைந்த பெண் உயிர் பிழைத்த அதிசயம்..!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், மருத்துவர்களால் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக கூறப்பட்ட பெண் ஒருவர், ஆம்புலன்ஸ் பள்ளத்தில் ஏறி இறங்கிய அதிர்ச்சியில் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 
 
வினிதா சுக்லா என்ற 50 வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறி மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர்.
 
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, வினிதாவை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் ஹபீஸ்கஞ்ச் என்ற பகுதி அருகே சென்றபோது, சாலையில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் ஏறி பலமான குலுக்கலுடன் இறங்கியது. அந்த நேரத்தில், இறந்ததாக கருதப்பட்ட வினிதாவின் உடலில் அசைவு ஏற்படுவதை கண்டு குடும்பத்தினர் இன்பஅதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர். உடனடியாக அவர் மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு வினிதாவை பரிசோதித்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ராகேஷ் சிங், அவருக்கு  உரிய சிகிச்சையை வழங்கினார். வியக்கத்தக்க வகையில், 24 மணி நேரத்திற்குள் வினிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. 13 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் முழுமையாக குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். 
 
ஒரு சாலையோரப் பள்ளம் ஒரு உயிரை காப்பாற்றிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva