1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:54 IST)

தயாநிதி மாறனை சிபிஐ கைது செய்யத் துடிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

1 கோடி ரூபாய் பாக்கிக்காக, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனை கைது செய்துதான் ஆக வேண்டுமா? என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பியுள்ளது.
 
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு அமைத்திருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்; தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி கண்டறிய வேண்டும்; மாறாக தயாநிதிமாறனை ஏன் கைது செய்ய வேண்டும்? என்றுஉச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
 
தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்திருந்தது. இவ்வழக்கில் தயாநிதிமாறனுக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால முன்ஜாமீனை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று ரத்து செய்தது. அவர் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. போலீசார் வசம் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் தயாநிதிமாறன் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
 
இந்நிலையில், முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தயாநிதிமாறன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், வி.கோபால கவுடா, ஆர்.பானுமதி ஆகியோரைக் கொண்ட அமர்வு புதனன்று விசாரணை நடத்தியது.
 
அப்போது, தயாநிதிமாறனின் முன்ஜாமீனை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், 1 கோடி ரூபாய் தொலைபேசி கட்டண பாக்கி வைத்ததற்காக ஒருவரை கைது செய்யத்தான் வேண்டுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
மேலும், இந்த வழக்கில் 2013-ஆம் ஆண்டே எப்.ஐ.ஆர். போடப்பட்டும், இதுவரை ஒருவர் கூட கைதுசெய்யப்படாதது ஏன்? கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.ஐ. என்ன செய்து கொண்டிருந்தது? இந்த காலகட்டத்தில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் யாரேனும் கைது செய்யப் பட்டிருக்கின்றனரா?
 
தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ வலியுறுத்துவதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியது. உத்தரப்பிரதேசத்தில் 100 நாள் வேலையுறுதித் திட்டத்தில் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு பொதுமக்கள் பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது; இவ்வழக்கில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை; ஆனால், ரூ.1 கோடி தொலைபேசி கட்டணப் பாக்கிக்காக, ஒருவரைக் கைது செய்ய சி.பி.ஐ. துடிக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.