1980-ஆம் ஆண்டு 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமை திருடியவர்.. 45 ஆண்டுகளுக்கு பின் கைது..!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில், சம்பந்தப்பட்ட நபர் தற்போது காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
1980-ஆம் ஆண்டு பல்காட் கிராமத்தை சேர்ந்த சலீம் என்பவர், தனது 20 வயதில் நண்பர்களுடன் இணைந்து வயலில் புகுந்து சுமார் 100 ரூபாய் மதிப்புள்ள கோதுமையை திருடியுள்ளார். அன்றைய காலகட்டத்தில் கோதுமையின் விலை கிலோ ஒரு ரூபாய் மட்டத்திலேயே இருந்தது.
திருட்டுக்குப்பின் தலைமறைவான சலீம், தார் மாவட்டத்தில் உள்ள பாக் நகரில் தனது அடையாளத்தை மாற்றிக்கொண்டு, மகனுடன் மளிகை கடை நடத்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் சைபர் பிரிவு போலீஸார் வேறு ஒரு குற்றவாளியை தேடியபோது, தற்செயலாக சலீம் குறித்த தகவல் கிடைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், இத்தனை காலத்திற்கு பிறகு பழைய குற்றம் மறக்கப்பட்டிருக்கும் என தான் நம்பியதாக சலீம் தெரிவித்துள்ளார். தற்போது 65 வயதாகும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின் பிடியிலிருந்து யாராலும் தப்ப முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.
Edited by Siva