உத்தரபிரதேசத்தில் வாட்ஸ் அப் குரூப் அட்மின் மற்றும் உறுப்பினர் மீது வழக்கு


Ashok| Last Updated: வெள்ளி, 8 ஜனவரி 2016 (15:45 IST)
குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து தவறான கருத்தை வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவு செய்த அந்த குரூப்பின் உறுப்பினர் மற்றும் அட்மின் மீது, மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே மோதலுக்கு தூண்டுதல் என்ற சட்ட பிரிவின் கீழ் உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
 
உத்தரபிரதேசம், முசாபர்நகரில் உள்ள கண்ட்லா நகரைச் சேர்ந்த பரம் சைனி என்பவர் தனது பெயரில் வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த குழுவில் அவரது நண்பர்கள் உறுப்பினராக இருக்கின்றனர். இந்த குரூபில் உறுப்பினராக இருந்த தீபக் என்பவர் அம்மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறித்து தவறான கருத்தை பதிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில், அவரது குரூப்பில் இருந்த அஸ்லாம் என்பவர், இந்த கருத்தை வாட்ஸ் ஆப்ல் பதிவு செய்தது குறித்து கண்ட்லா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், கவால்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
 
பின்னர், தீபக் மற்றும் அந்த குரூப் அட்மின் பரம் சைனி மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 153 கீழ், மத அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே மோதலுக்கு தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு கேடு விளைக்கும் நோக்கத்துடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :