நாட்டிற்கு தற்போதயை தேவை சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: ராமதாஸ்


K.N.Vadivel| Last Updated: செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (23:23 IST)
நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணிகளை மத்திய அரசு உடனே தொடங்க முன்வர வேண்டும் என்று பாமக தெரிவித்துள்ளது.
 
 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அந்த இயக்கத்தின் ‘ஆர்கனைசர்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்யும்படி வலியுறுத்தியுள்ளார். இது மிகவும் ஆபத்தானது, இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதும் ஆகும்.
 
அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெளிப்படையான திட்டங்கள் என்றால், இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பது மறைமுகமான திட்டம் ஆகும்.
 
இதை கடந்த காலங்களில் மற்றவர்களின் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இப்போது நேரடியாகவே இக்கருத்தை முன்வைத்துள்ளது.
 
‘‘ இட ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்வதற்காக ஒட்டு மொத்த நாட்டு நலனில் அக்கறை கொண்ட, சமூக, சமத்துவத்தில் உறுதிப்பாடு கொண்ட சிலரை உள்ளடக்கிய குழு அமைக்க வேண்டும்.
 
எந்தெந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தேவை, எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை அக்குழு தீர்மானிக்க வேண்டும். இதை செயல்படுத்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட, அரசியல் கலப்பில்லாத ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இந்தியாவில் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆயத்தமாகி விட்டது என்பதையே மோகன் பாகவத்தின் இந்த நேர்காணல் உணர்த்துகிறது.
 
இந்தியாவில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாது என்று மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் கூறியிருக்கும் போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமை என்ன? பாஜக வலிமை என்ன? யார் சொல்வதை யார் கேட்பார்கள்? என்ற வினாக்களுக்கு விடை அறிந்தவர்களால் நடக்கபோவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :