வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2015 (08:03 IST)

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் வியாபம் ஊழல்தான் - குலாம் நபி ஆசாத்

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் வியாபம் ஊழல்தான் என்றும், இந்த ஊழல் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் மூத்த தலைவரும் டெல்லி மேல்-சபை எதிர்க் கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது, குலாம் நபி ஆசாத் கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வியாபம்  ஊழல், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தை  நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எழுப்பும். அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
 
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் வியாபம் ஊழல்தான். 76 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் இது. இந்த ஊழல் வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட 50 பேர் உயிர் இழந்துள்ளனர்.
 
இந்த ஊழலின் பின்னணியில் உள்ள உண்மை நாட்டு மக்களுக்கு தெரியவேண்டும். எனவே இந்த பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, அரசாங்கத்திடம் விளக்கம் கேட்போம்.
 
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மீது பிரதமர்  நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தையால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதுபற்றி பேசினோம். நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம்.
 
காங்கிரஸ் பொறுப்புள்ள கட்சி என்பதையும், மசோதாக்கள் அவற்றின் தகுதியின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறோம்" என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

நாடாளுமன்றம் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதிவரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.