மூத்த இதழாளர் எம்.வி. காமத் மறைவு - நரேந்திர மோடி இரங்கல்

Annakannan| Last Modified வியாழன், 9 அக்டோபர் 2014 (19:27 IST)
மூத்த இதழாளரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைவருமான எம்.வி.காமத் (93), மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

எல்லோராலும் எம்.வி.காமத் என்று அழைக்கப்படும் இவரது முழுப் பெயர், மாதவ் விட்டல் காமத். இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதைப் பெற்றவர். இதுவரை 45-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். இவரது சேவையைப் பாராட்டி மங்களூர் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

மும்பையில், 1946ஆம் ஆண்டு 'தி ஃபிரீ பிரஸ் ஜர்னல்' பத்திரிகையில் நிருபராகத் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கிய காமத், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவர்.
1955 முதல் 1958 வரை ஐக்கிய நாடுகளில் பி.டி.ஐ-க்கு (பிரெஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா) சிறப்புச் செய்தியாளராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும், இல்லஸ்டிரேடட் வீக்லி ஆஃப் இந்தியா, ஃபிரீ பிரெஸ் புல்லட்டின், பாரத் ஜோதி, ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், ஃபிரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையில் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். அத்துடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு ஐரோப்பியச் செய்தியாளராகவும் வாஷிங்டன் செய்தியாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நாடு விடுதலை அடைந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர்களில் இன்று வரை உயிரோடு இருந்தவர், இவர் ஒருவரே.

எம்.வி. காமத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

சிறந்த எழுத்தாளர் மற்றும் சிறந்த மனிதரான எம்.வி. காமத் மறைவு, ஊடக உலகுக்கு இழப்பாகும். அவருடைய ஆத்மா சாந்தி அடைய நான் பிராத்திக்கிறேன். எம்.வி. காமத் அவர்களுடன் நான் கொண்ட பல்வேறு உரையாடல்களை நினைவு கூர்கிறேன். மனித நேயம் கொண்ட அவர் அறிவுத் திறனின் வங்கி.

இவ்வாறு பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எம்.வி.காமத் மறைவுக்கு வெப்துனியா, தனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :