வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 15 ஆகஸ்ட் 2015 (00:11 IST)

இலங்கையில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் இறக்குமதி - பழ.நெடுமாறன் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு எதிராக கேரளாவில் சதி நடைபெறுவதாகவும், அதனால், இலங்கையில் இருந்து காய்கறிகளை வாங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாகவும் பழ.நெடுமாறன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளில்,அதிக அளவு நச்சுத்தன்மை உள்ளதாக கேரள அரசு குற்றம் சாட்டி இருந்தது. மேலும், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, காய்கறிகளை வாங்க, அதிக கட்டுப்பாடுகள் விதித்தது.



இதனை கண்டித்து, தமிழர் உரிமை மீட்பு குழு சார்பில் கம்பத்தில் இருந்து கேரளாவை நோக்கி பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
இந்தப் போராட்டம் கேரள அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிரான போராட்டம். கேரள மக்களை எதிர்த்து அல்ல.

கேரளாவில் உள்ள சில அரசியல்வாதிகள், உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு போராடி பெற்ற நியாயமான தீர்ப்பினை தாங்கிக் கொள்ள முடியாமல், குரோத எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
 
அதன் விளைவாகவே, தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளதாக கூறி,  தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்து, தமிழக விவசாயிகளுக் எதிரான செயல்படுகின்றனர்.
 
இதற்குமேல் உச்சகட்டமாக,  கேரளா உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் டெல்லியில் இணைந்து தமிழகத்திற்கு எதிராக சதி செய்து வருகின்றனர். அதன் விளைவாக, இலங்கை அரசிடம் ஒப்பந்தம் செய்து காய்கறிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளனர்.
 
இதன் காரணமாகவே தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை உள்ளாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். எனவே, இந்த உண்மைநிலையை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, தமிழக விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.