அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் ஒலிக்கும் முன் வந்தே மாதரம் கட்டாயம்.. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு..!
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், பள்ளிகளிலும் தேசிய கீதமான 'ஜன கண மன' இசைக்கப்படுவதற்கு முன்பாக, தேசிய பாடலான 'வந்தே மாதரம்' கட்டாயம் இசைக்கப்பட வேண்டும். வந்தே மாதரம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 1937-இல் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்ட நான்கு சரணங்கள் உட்பட, வந்தே மாதரத்தின் அனைத்து ஆறு சரணங்களும் இனி இசைக்கப்படும். துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் சரணங்கள் நீக்கப்பட்டது நாட்டின் பிரிவினைக்கு வித்திட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்த நிலையில், இந்த அதிரடி மாற்றம் வந்துள்ளது. பத்மா விருதுகள் மற்றும் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் இப்பாடல் இனி முக்கிய இடம் பிடிக்கும்.
தேசியப் பாடலுக்கு அவமதிப்பு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன்னதாக வந்துள்ள இந்த அறிவிப்பு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
Edited by Siva