வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (20:20 IST)

வதோதராவில் வகுப்புவாத மோதல்: கைது எண்ணிக்கை 140 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற வகுப்புவாத மோதல் தொடர்பாக இதுவரை 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
 
வகுப்புவாத மோதலை தூண்டிவிடும் வகையில் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து வதோதராவில் வியாழக்கிழமை முதல் பதட்டம் அதிகரித்தது. இதன் காரணமாக சனிக்கிழமை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பை பலப்படுத்தினர். துணை ராணுவப் படையும் குவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு சில பகுதிகளில் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூத்த அதிகாரிகள் தொடர்ந்து அங்கு முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
 
மோதலில் ஈடுபட்டதாக நேற்று இரவு வரை 40 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி மேலும் பலரை கைது செய்தனர். இன்று பிற்பகல் நிலவரப்படி 140க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவர தடுப்பு போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
கலவரம் பரவுவதை தடுக்கும் நோக்கிலும், பதட்டத்தை தணிக்கும் வகையிலும் நாளை வரை செல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.