வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஆகஸ்ட் 2014 (11:55 IST)

உ.பி.க்கு வருண் காந்தி முதலமைச்சர் ஆக வேண்டும் - மேனகா காந்தி

உத்தர பிரதேச மாநிலத்திற்கு வருண் காந்தி முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மேனகா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தாகியா கிராமத்தில் பாஜக பொதுக் கூட்டம் நடந்தது. இதில் அந்த தொகுதி எம்.பி.யான மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

“உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும். அப்போதுதான் இந்த மாநிலத்துக்கு நன்மை கிடைக்கும். மாநிலத்தின் நலனுக்காக பாஜகவால் அதிகாரப்பூர்வமாக பணியாற்ற முடியும்.

அதிலும் வருண் காந்தி உத்தரபிரதேசத்தின் முதலமைச்சர் ஆனால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் பிலிபித் தொகுதி மக்கள் நினைப்பது எல்லாம் நிறைவேறும்.

வருண் காந்தி பல்வேறு நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்ந்து 2 ஆவது முறையாக எம்.பி. ஆகி சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது செயல்பாடுகள் மிகவும் திருப்தியாக உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில், நீங்கள் பாஜக வுக்கு 71 தொகுதிகளைத் தந்தீர்கள். இதனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ்யாதவும் மக்களை பழிவாங்கி வருகிறார்கள்.

மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தர அகிலேஷ் யாதவ் அரசு மறுத்து வருகிறது. வருகிற சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேச மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்“ இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.