நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் கூட டைப் செய்ய தெரியவில்லை.. கிளர்க்கில் இருந்து பியூனாக பதவி இறக்கம்..!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை எழுத்தர்களாக பணியாற்றி வந்த மூன்று பேர், தட்டச்சு தேர்வில் தோல்வியடைந்ததால் அதிரடியாக பியூன்களாக தரம் இறக்கப்பட்டுள்ளனர்.
அரசு விதிகளின்படி, கருணை அடிப்படையில் நியமிக்கப்படும் பணியாளர்கள் ஓராண்டிற்குள் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
பிரேம்நாத் யாதவ், அமித் குமார் யாதவ் மற்றும் நேஹா ஸ்ரீவஸ்தவா ஆகிய மூவரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்வில் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக அவர்களின் ஊதிய உயர்வு உடனடியாக நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி பெற போதிய கால அவகாசம் வழங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், இரண்டாவது முறையும் அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தட்டச்சு செய்ய முடியாமல் தோல்வியை தழுவினர்.
தொடர்ந்து இரண்டு முறை தகுதி தேர்வில் தவறியதால், மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங் அவர்களின் பதவியை குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது அவர்கள் எழுத்தர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, நான்காம் நிலை ஊழியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
அரசு பணியில் நுழையும்போது வழங்கப்படும் சலுகைகள் இருந்தாலும், அடிப்படை தகுதியை நிரூபிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.
Edited by Siva