வரியை குறைத்த டிரம்புக்கு மோடி நன்றி.. அமெரிக்காவுக்கு என்றும் இந்தியா துணை நிற்கும்..!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா மீதான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிரடியாக குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில், இது இந்திய தொழிலதிபர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக நடைபெற்ற மிக முக்கியமான ஆலோசனைக்கு பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை இந்திய ஏற்றுமதி துறைக்கு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த அறிவிப்புக்கு பிறகு, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்க அதிபருக்கு நெகிழ்ச்சியான நன்றியை தெரிவித்துள்ளார். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக தனது நன்றிகளை பதிவு செய்த பிரதமர், உலக அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா என்றும் துணை நிற்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளான இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது, இருநாட்டு மக்களுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் நன்மைகளைத் தரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரிக்குறைப்பு அறிவிப்பால் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகள் பெரும் லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva