காதலித்தவனை திருமணம் செய்தால் விவாகரத்து நடக்கும்.. ஜோதிடரின் கணிப்பால் விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!
பெங்களூருவில் ஜோதிடரின் எதிர்மறையான கணிப்பால் மனமுடைந்த 27 வயது இளம்பெண் வித்யாஜோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வித்யா ஜோதி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திருமணத்திற்கு முன்பாக அவர்கள் பார்த்த ஜோதிடர் ஒருவர், மாற்று சமூகத்தினரை திருமணம் செய்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டு விவாகரத்தில் முடியும் என்று கணித்துள்ளார்.
இந்த கணிப்பால் வேதனையடைந்த வித்யா ஜோதி, அதன் பாதிப்பை தடுக்க 9 நாட்கள் தொடர்ந்து பரிகாரங்களை செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, 9-வது நாள் பரிகாரம் முடிந்தவுடன் அவர் தனது அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
மூடநம்பிக்கைகளும், தேவையற்ற பயமுறுத்தல்களும் ஒரு இளம் உயிரை பறித்துள்ள இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மன ரீதியான பலவீனமும், ஜோதிடத்தின் மீதான அதீத பயமுமே இத்தகைய விபரீத முடிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva