வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2015 (06:43 IST)

தேவர் குருபூஜையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்கிறார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: விடுதலைப் போராட்ட வீரரும், குற்றப்பரம்பரை சட்டத்தை ஒழிக்க போராடியவருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 108 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 52 ஆவது குருபூஜை இன்று நடைபெறவுள்ளன.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமிழகத்தின் போற்றத்தக்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார். இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியதில் தொடங்கி தலித்துகளின் ஆலய நுழைவுக்கு உதவியது& நிலம் வழங்கியது என பல நன்மைகளை செய்துள்ளார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியது, தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என முழங்கியது என ஏராளமான சிறப்புகளுக்கு சொந்தக்காரராக அவர் திகழ்கிறார். அவரது சிறப்பை போற்றும் வகையில் தான் ஆண்டு தோறும் தேவர் குருபூஜை அரசு நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் தேவர் வாழ்ந்து, மறைந்த பசும்பொன் கிராமத்தில் நாளை நடைபெறும் குருபூஜையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இன்று காலை 11.00 மணியளவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் மலர் வளையம்  வைத்து மரியாதை செலுத்துகிறார்கள். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மற்றும் தென் மாவட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.