10 கோடி ரூபாய் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய புகையிலை தொழிலதிபர் மகன்.. பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி..!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள விஐபி சாலையில், புகையிலை அதிபர் கே.கே.மிஸ்ராவின் மகன் சிவம் மிஸ்ரா ஓட்டி வந்த 'லேம்போர்கினி ரெவுவெல்டோ' கார் கோர விபத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அதிநவீன கார், மிதவேகத்தில் வந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஒரு ஆட்டோ மற்றும் ராயல் என்பீல்ட் பைக் பலத்த சேதமடைந்தன. பைக்கில் இருந்த நபர் சுமார் 10 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில், சிவம் மிஸ்ரா குடிபோதையில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற சிவம் மிஸ்ராவை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர்.
அவருடன் வந்த பாதுகாவலர்கள் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து சிவம் மிஸ்ராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தை ஏற்படுத்திய விலையுயர்ந்த கார் தற்போது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva