செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2015 (21:36 IST)

ரூ 20 ஆயிரம் கோடியை ஆட்டையைப் போட்ட பாஜக அரசு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை கலால் வரியை 4 முறை உயர்த்தி உள்ளது. இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களான சுமார் ரூ.20 ஆயிரம் கோடி பாஜக அரசுக்கு கிடைத்துள்ளது என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த  ஒன்றரை ஆண்டு காலத்திலேயே பாஜகவின் சாயம் வெளுத்து விட்டது.
 
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாக இருந்தது. டீசல் விலை ரூ.60.05 ஆக இருந்தது.
 
தற்போது பாஜக ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலையை 60 சதவீதம் குறைத்திருக்க வேண்டிய பாஜக அரசு மேலும் 4 முறை கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டுள்ளது.
 
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.16, டீசலுக்கு 40 காசுகள் கலால் வரி விதித்துள்ளது. இதன் மூலமாக கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலில் ரூ.17.46 ஆக இருந்தது தற்போது ரூ.19.06 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.10.26 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.10.66 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை கலால் வரியை 4 முறை உயர்த்தி உள்ளது. இதனால், ரூ.20 ஆயிரம் கோடி பாஜக அரசுக்கு கிடைத்துள்ளது.
 
மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பயன்களை எல்லாம் கலால் வரி மூலம் பாஜக அரசு தனது கஜானாவை நிரப்பியுள்ளது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.
 
சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு வருமான வரம்பு விதிக்கப்படுவதோடு, கார், இரண்டு சக்கர வாகனம், வீடு வைத்துள்ள அனைவருக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
ஏற்கனவே, விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளில் நொந்து போன மக்கள் மீது பாஜக அரசு மிகப் பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது.
 
இது போன்ற தவறான நடவடிக்கைகளை பாஜக அரசு திரும்பப் பெறவில்லை என்றால், மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.