1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 23 ஜூலை 2015 (12:14 IST)

திருப்பதி கோவிலைப் போன்று தெலங்கானாவில் ஒரு கோவில்: சந்திரசேகர ராவ் முடிவு

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியைப் போன்று தெலங்கானா மாநிலத்திலுள்ள யாதகிரிகுட்டா கோவிலை பிரபலமாக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
 
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு தெலங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால், ஆந்திர மாநில பகுதிக்குள் திருப்பதி ஏழுமலையான் சுவாமி கோவில் உள்ளது.
 
இந்நிலையில், தெலங்கானா மாநில பகுதிக்குள் இத்தகு புகழ்மிக்க கோவில் ஏதுவும் இல்லை. இந்தக் குறையை போக்க தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
 
அதன்படி, தெலங்கானா மாநிலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக ஒரு கோவிலை உருவாக்கவும், அந்த கோவிலை, தெலுங்கானா திருப்பதி கோவிலாக உருவாக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
 
இதற்காக அவர் யாதகிரிகுட்டாவில் உள்ள ஒரு கோவிலை திருப்பதி கோவிலுக்கு இணையாக மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

யாதகிரிகுட்டா கோவில் ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சாலை போக்குவரத்து, மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளைக் கொண்டது.
 
யாதகிரிகுட்டா கோவிலும் திருப்பதியைப் போன்று மலையில்தான் அமைந்துள்ளது. தற்போது 1 மலையேறினால் போதும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், இந்த கோவிலுக்கு 9 மலைகளைக் தாண்டி பக்தர்கள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
மேலும், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தயாதகிரிகுட்டா மலையை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து யாதகிரிகுட்டா கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
வாரந்தோறும், சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியிருப்பதாகவும், இதனால் கோவிலுக்கு வரும் வருமானமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.