1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 11 டிசம்பர் 2014 (14:21 IST)

அரசியல் விளையாட்டில் ஈடுபட இது நேரமல்ல - மோடி மீது சோனியா தாக்கு

அரசியல் விளையாட்டில் ஈடுபடும் நேரமல்ல இது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சோனியா கூறியுள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு 14ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 
அப்போது, ”மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு சமீபத்தில் வந்த பிரதமர் மோடி, ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். மேலும் சில திட்டங்களையும் அறிவித்தார். ஆனால் இங்குள்ள உண்மை நிலை என்ன? என்பது உங்களுக்கு தெரியும்.
 
வெற்று வாக்குறுதிகளை மட்டுமே நீங்கள் தாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். அரசியல் விளையாட்டில் ஈடுபடும் நேரமல்ல இது. மாறாக உங்கள் கவலைகளை போக்க வேண்டிய நேரம். நீங்கள் தங்குவதற்கு கூடாரங்களும், உண்பதற்கான உணவு மற்றும் தினசரி தேவைகளை அளிக்க வேண்டிய நேரம்.
 
ஆனால் மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, இது தொடர்பான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போது பாஜக ஆட்சியில் இங்கு என்ன நடக்கிறது? உங்களின் கவலைகளை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
 
ஆனால் இவ்வளவு வலிகளை தாங்கிக்கொண்டும், நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மிகவும் ஆர்வத்துடன் அதிக எண்ணிக்கையில் நீங்கள் வாக்களித்து வருகிறீர்கள். இந்த மன உறுதிக்காக உங்களை வணங்குகிறேன்.
 
காஷ்மீரின் வளர்ச்சியே நமது நோக்கம் என்பது தெளிவாக உள்ளது. இந்த முன்னேற்ற பணிகள் அனைத்தும் கடின உழைப்பால் வந்தவை. வெற்று வாக்குறுதிகளால் அல்ல. வாக்குறுதிகள் அளிப்பதால் மட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது” என்று சோனியா காந்தி கூறினார்.
 
மற்றொரு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ”மதத்தின் பெயரால் மக்கள் அடித்துக் கொள்ள வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த சாத்வி மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் இது தெளிவாகிறது” என்று கூறினார்.