ஓடும் பேருந்தில் பாலியல் சீண்டல்!. வீடியோ வைரலானதால் 42 வயது நபர் தற்கொலை!...
பெண்கள் பல இடங்களில் பாலியல் சீண்டல்களையும், பாலியல் தொந்தரவுகளையும் சந்திப்பது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் இப்போது எல்லோர் கையிலும் செல்போன் இருப்பதால் அது போன்ற சம்பவம் நடக்கும் போது சில பெண்கள் துணிச்சலாக அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். அதோடு, அந்த இடத்திலேயே பாலியல் சீண்டல் செய்தவரை தட்டிக் கேட்கிறார்கள்.
குறிப்பாக கேரளாவில் இது போன்ற பல வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட தன் அருகில் உட்கார்ந்திருக்கும் சிறுமியிடம் ஒரு வயதான ஒருவர் பாலியல் சீண்டல் செய்ததை ஒரு பெண் துணிச்சலாக வீடியோவாக வெளியிட்டுருந்தார். மேலும், அவரின் கன்னத்திலும் அறைந்தார்.
அதேபோல், கேரள மாநிலம் கோழிக்கட்டில் பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் 42 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அது லட்சக்கணக்கான பார்வையர்களிடம் சென்றடைந்தது. இதையடுத்து அந்த நபரை கடுமையாக பலரும் விமர்சித்ததோடு போலீசார் அவர் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.
இந்நிலையில் அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையின் செய்தி படி தீபக் என்கிற அந்த நபர் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.