வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (06:09 IST)

தயாநிதி மாறனை கைது செய்யவேண்டும்: சிபிஐ பிடிவாதம்

திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
கடந்த 2004- 2007ஆம் ஆண்டில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சுமார் 700 க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று சன் டி.வி.க்கு சட்டத்திற்கு புறமாக பயன்படுத்தினார் என்று சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
 
இந்த நிலையில், சிபிஐ கைது செய்யக் கூடாது என இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த வந்தபோது, தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
 
இந்த நிலையில், விசாரணையின் போது சிபிஐ தரப்பில் முதலாவது பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன் தவறு செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. மேலும், அவர்  விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார். எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
சிபிஐ-ன் இந்த பிரமாண பத்திரம் மீது பதிலளிக்குமாறு தயாநிதி மாறனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.