அதெப்படி தடை போடலாம்.. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டெலிகிராம்...
ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நீட் மறுதேர்வுக்கு முன்னதாக, தங்களுக்கு தற்காலிக தடை விதித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த தடை உத்தரவு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ், ஜூன் 22 வரை குறுகிய காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நீட் தேர்வு வினாத்தாள்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளில் பிடிஎஃப் வடிவில் கசிந்ததாக சிபிஐ தனது விசாரணையில் தெரிவித்தது. இதனால் தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானதை அடுத்து, இந்த மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. மீண்டும் இது போன்ற முறைகேடுகள் நடப்பதை தடுக்கவும், வினாத்தாள்கள் சட்டவிரோதமாக பரவுவதைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த தடையை விதித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை இந்த தடையை வரவேற்றுள்ளது. சமீபத்திய வாரங்களில் "Paper Leaked NEET", "Re-NEET 2026", "Private Mafia" போன்ற பெயர்களில் பல டெலிகிராம் சேனல்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கவலைகள் எழுந்தன.
வரவிருக்கும் மறுதேர்வை நியாயமான முறையிலும் வெளிப்படையான முறையிலும் நடத்த இந்தத் தற்காலிக தடை உதவும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
Edited by Siva
