காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளரின் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி: சுப்ரீம் கோர்ட்டில் மனு
ராஜ்யசபா தேர்தலுக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்த உள்ளது.
தமிழகம், கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 26 ராஜ்யசபா இடங்களுக்கு வரும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் உள்ள 3 இடங்களுக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ஆனால், தெலுங்கானாவில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கு ஒன்றை அவர் மறைத்துவிட்டதாக பா.ஜ.க. வேட்பாளர் மகேஷ் கெவத் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சியின் வேட்புமனுவை அதிரடியாக நிராகரித்தார்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் கமிஷனைச் சந்தித்து முறையிட்ட நிலையில், மீனாட்சி நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள சூழலில், நீதிபதிகள் பிரஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முக்கியக் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது.
தேர்தல் நடைமுறைகள் ஏற்கனவே தொடங்கி முழு வீச்சில் நடந்து வரும் வேளையில், இந்த மனு எவ்வாறு சட்டப்படி ஏற்கத்தக்கது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Edited by Siva
