வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 டிசம்பர் 2014 (23:22 IST)

நீதிபதிகளை நியமிக்க இந்தியாவில் புதிய சட்டம்

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளை நியமிக்க புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.


 
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று(31.12.14) ஒப்புதல் வழங்கியுள்ளார்.
 
கொலிஜியம் என்றழைக்கப்படும் நீதிபதிகளைக் கொண்டத் தேர்வுக் குழுவிற்கு மாற்றாக, இனி தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் செயல்படத் துவங்கவுள்ளது. இதனால் நீதிபதிகளை, நீதிபதிகளே தேர்வு செய்யும் முறை முடிவுக்கு வந்துள்ளது.
 
புதிய ஆணையத்தில் மொத்தமாக 6 பேர் இடம்பெறுவார்கள்.
 
இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர, 2 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளும், மத்திய சட்டத்துறை அமைச்சரும் இடம்பெறுவார்கள்.
 
இவர்களோடு 2 முக்கியஸ்தர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
 
அவ்வாறு தேர்வு செய்யப்படும் அந்த 2 பிரபலங்கள் அல்லது முக்கியஸ்தர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
 
அந்த இருவரில் ஒருவர் கண்டிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வெண்டும். இல்லாவிட்டால் அவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
 
இந்தக் குழுவுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைவராக இருப்பார்.
இரண்டு முக்கியஸ்தர்களைத் தேர்தெடுக்கும் குழுவில் தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைக் கொண்டுள்ள எதிர்கட்சியின் தலைவர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
 
இதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
அரசியலமைப்புச் சட்டத்தில் 121 சட்டத் திருத்தமாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
 
புதிய முறையில் அமைக்கப்படவுள்ள ஆணையத்தில், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறி அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது.